அம்பத்தூர்: கோயம்பேடு அருகே ஒரு கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததுடன், தன்னை காதலிக்க மறுத்த மாணவியை ஒரு வாலிபர் மாடியிலிருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு சுயநினைவின்றி ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபோதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (45). இவரது மகள் ஷர்மிளா (19). இவர், அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக ஷர்மிளாவை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து, அவரை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
அந்த வாலிபரின் ஒருதலை பட்ச காதலை கல்லூரி மாணவி ஷர்மிளா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்கு கல்லூரி மாணவி ஷர்மிளா சென்றிருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டு மாடியிலிருந்து மதுபோதையில் அந்த வாலிபர், ஷர்மிளாவின் வீட்டு மொட்டை மாடியில் குதித்துள்ளார். பின்னர் தன்னை காதலிக்கும்படி ஷர்மிளாவிடம் வலியுறுத்தவே, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமான போதை வாலிபர், வீட்டு மொட்டை மாடியிலிருந்து கல்லூரி மாணவி ஷர்மிளாவை கீழே தள்ளி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், மாடியிலிருந்து கல்லூரி மாணவி ஷர்மிளா கீழே தள்ளிவிடப்பட்டதில், அவரது இடுப்பு எலும்பு உடைந்ததுடன் படுகாயங்களுடன் அலறி துடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சுயநினைவின்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வீட்டுமாடியில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிவிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட போதை வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பிடிபட்ட போதை வாலிபரை போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் (21) என்பதும், இவர் நீண்ட காலமாக கல்லூரி மாணவி ஷர்மிளாவை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற சிலம்பரசனை கைது செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
