கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே நாகமநாயக்கன்பாளையத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த திலீபன் என்பவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதே ஊரை சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அன்பு எஸ்தரின் குடும்பத்தினர் துபாயில் வேலை செய்வதாக தெரிகிறது. நேற்று மதியம் திலீபன் மற்றும் அன்பு எஸ்தர் ஆகிய 2 பேரும் ஓட்டலில் உணவு பரிமாறும் பணிகளை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது ஓட்டலுக்கு நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம் ஆனந்த் (52) என்பவர் வந்தார். இவர் அன்பு எஸ்தரின் உறவினர் என கூறப்படுகிறது.
அன்பு எஸ்தர் காய்களை நறுக்கி கொண்டிருந்தபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம் ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்பு எஸ்தரின் கழுத்தில் வைத்து குத்திக்கொல்ல முயன்றார். இதில் அன்பு எஸ்தருக்கு கழுத்தில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. அப்போது அன்பு எஸ்தரை காப்பாற்ற முயன்ற ஓட்டல் உரிமையாளர் திலீபனையும் பிரேம் ஆனந்த் கத்தியால் குத்த முயன்றார். இதில் திலீபனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அன்பு எஸ்தர் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்துக்கு வந்த போலீசார் பிரேம் ஆனந்தை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையின்போது, ‘‘எனக்கு ஏற்கனவே 3 திருமணமாகியுள்ளது.
முதல் மனைவி இறந்து விட்டார். 2வது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். மூன்றாவது மனைவி வேறு ஒருவருடன் ஓடி விட்டார். அன்பு எஸ்தரை 4வதாக திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்தேன். அதற்கு அன்பு எஸ்தர் மறுப்பு தெரிவித்துடன், ஓட்டல் வேலைக்கு வந்து விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த நான் எஸ்தரை கொல்ல ஓட்டலுக்கு கத்தியுடன் வந்தேன். அவரை கொல்ல முயன்றபோது ஓட்டலில் இருந்த திலீபன் தடுத்து நிறுத்த முயன்றதால் அவரையும் கத்தியால் குத்திக்கொல்ல முயன்றேன்’’ என பிரேம் ஆனந்த் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
