பள்ளிபாளையம், ஜன.5: பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள ஆதி விஸ்வேஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வழிபாடு நடைபெற்றது. பரிசல் மூலம் பக்தர்கள் பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் பாறையின் மீது அமைந்துள்ள ஆதி விஸ்வேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோயிலை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால், கரையிலிருந்து விக்கிரகங்கள் பரிசல் மூலம் எடுத்துச்செல்ப்பட்டு கோயிலில் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெற்றது. ஆவத்திபாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் பரிசல் மூலம் பயணம் செய்து ஆரூத்ரா தரிசனம் செய்தனர். மாலையில் பூஜைகள் நிறைவடைந்த பின்னர் பக்தர்கள் சுவாமி விக்கிரங்களுடன் பரிசலில் கரை திரும்பினர். பின்னர், பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
