தேன்கனிக் கோட்டை, ஜன.5: தேன்கனிக்கோட்டை அருகே கட்சுவாடி கிராமத்தை சேர்ந்த சந்தர்நாயக் மகன் சிவராஜ்(27). இவர் நேற்று முன்தினம் இரவு, பாலத்தோட்டபள்ளியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஒசட்டி அருகே செல்லும் போது, எதிரே காசிநாயக்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(40) என்பவர் ஓட்டி வந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் உயிரிழந்தார். சந்திரன் மேல் சிசிச்சைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
