சென்னை: தமிழக முதல்வர் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை முதல்வராக பார்த்தோம். இனி அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்போம் என மாநில மகளிர் அமைப்பு சங்க தலைவர் செல்வராணி கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வு உறுப்பினர் சங்கத்தினர் மாநில தலைவர் செல்வராணி கூறியதாவது: 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்க தொடர்ந்து களத்தில் போராடியபோது கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் எங்களது போராட்டங்களிலும் கலந்துகொண்டு, நான் முதல்வர் ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போராட விட மாட்டேன், உங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவேன் என்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி இன்றைக்கு முதல்வர் 6.5 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை மு.க.ஸ்டாலினை முதல்வராக பார்த்தோம். இனி அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறோம். அவருடைய தந்தை கலைஞர் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், காவலர்கள் பணியிடத்திலும், சொத்து உரிமையில் பங்கு கொடுத்ததுபோல் இன்றைக்கு இருக்கும் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி இருக்கிறார். அதே நேரத்தில் அரசின் திட்டங்களை கடைகோடி கிராமங்களுக்கு கொண்டு செல்கின்ற சத்துணவு ஊழியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி சொல்லி இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
இதையும் வருகின்ற பொங்கலுக்குள் சத்துணவு ஊழியர்களுக்கு வாழ்க்கையில் ஒளிஏற்றும் விதமாக ஒரு நல்ல அறிவிப்பை தருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட எங்களுடைய முதல்வர் அதையும் நிறைவேற்றுவார் என்று நம்பி களத்தில் இருக்கிறோம். சாலை பணியாளர்களுடைய 41 மாத பணிநீக்க காலத்தையும் முதல்வர் கனிவோடு பரிசீலித்து அதையும் பொங்கலுக்குள் நிறைவேற்ற வேண்டும். சமீபத்தில் மருத்துவ துறையில் 1000 பணியிடங்களை நிரப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். வருகின்ற காலத்தில் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளை பாதுகாக்கும் விதமாக அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். முதல்வர் மீண்டும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
