போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியரை தப்ப வைக்க சதி கேரள முன்னாள் அமைச்சர் உள்பட 2 பேருக்கு 3 வருடம் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதி ஜனநாயக கேரளா காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ஆண்டனி ராஜு. தற்போதைய பினராயி விஜயன் மந்திரிசபையில் இரண்டரை ஆண்டுகள் இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஆண்டனி ராஜு 1990 காலகட்டத்தில் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக இருந்தார். இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்த 61 கிராம் ஹாசிஷ் என்ற போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆண்ட்ரூவுக்கு 10 வருடம் தண்டனை கிடைத்தது.

மேல்முறையீட்டை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் போலீசார் கைப்பற்றிய உள்ளாடை மிகவும் சிறியது என்றும், அதை ஆண்ட்ரூவால் அணிய முடியாது என்றும் கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்ற ஆண்ட்ரூ மெல்பர்னில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தான் கைது செய்யப்பட்ட போது தன்னுடைய வக்கீல் ஆண்டனி ராஜு மற்றும் நீதிமன்ற ஊழியர் ஜோஸ் ஆகியோரின் உதவியுடன் நீதிமன்றத்திலிருந்து உள்ளாடையை மாற்றி வழக்கிலிருந்து தப்பித்ததாகவும் அதேபோல் இந்த வழக்கிலிருந்தும் தான் தப்பித்து விடுவேன் என்றும் சக கைதியிடம் இவர் கூறினார்.

இந்தக் கைதி இந்த விவரத்தை சிறை அதிகாரிகளிடம் கூறினார். இந்த விவரம் இன்டர்போல் மூலம் கேரள போலீசுக்கு தெரியவந்தது. ஆண்டனி ராஜு , நீதிமன்ற ஊழியர் ஜோஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆண்டனி ராஜு எம்எல்ஏ மற்றும் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் ஜோஸ் ஆகியோருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது. 3 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்டனி ராஜுவின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்.

Related Stories: