ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதல்களில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு மோதல்களில் மொத்தம் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டம் கிஸ்டாராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
அங்கிருந்து ஏகே 47, வெடிபொருட்கள், வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, பிஜப்பூர் மாவட்டம் ககன்பள்ளி கிராமத்தில் நேற்று காலை நடந்த மற்றொரு மோதலில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்த மங்டு மற்றும் ஹூங்கா மட்காம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கோண்டா பகுதியில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு சட்டீஸ்கரில் 285 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
