திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஆன்லைனில் குலுக்கல் முறையில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் 8ம் தேதி வரை டிக்கெட் இன்றி வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைக்கப்பட உள்ளது.
அதன்படி நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக 83,032 பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தனர். 27,372 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.10 கோடி காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி சிலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களும் சுமார் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வைகுண்ட ஏகாதசி தரிசனம் காரணமாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
