புதுடெல்லி: விசாரணையை முடிப்பதில் ஏற்படும் அசாதாரண தாமதம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மட்டுமே நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிப்பதாகவும் அது வழக்கமான நடைமுறை அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆவணங்களில் முறைகேடு செய்து ஆயுத உரிமம் பெற்ற வழக்கில் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணையை 90 நாட்களில் முடிக்கவும், அதுவரை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே.சிங் ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எந்த வழக்கிலும் விசாரணை அமைப்புகளுக்கு நீதிமன்றம் முன்கூட்டியே காலக்கெடு விதிப்பதில்லை. விசாரணையில் தாமதம் ஏற்பட்ட பின்னரே காலக்கெடு விதிக்கப்படுகிறது. எனவே காலக்கெடு விதிப்பது விதிவிலக்காகவே இருக்கிறது. விசாரணையின் தொடக்கத்திலேயே காலக்கெடு நிர்ணயித்தால் அது மற்ற அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிடுவதாக அமையும். அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தேவையற்ற தாமதங்கள், தேக்கநிலை அல்லது அதுபோன்ற ஆதாரங்கள் நிரூபிக்கப்படும் போது காலக்கெடு விதிக்கப்படுகிறது. எனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.
