இந்தூர்: இந்தூரில் மாசடைந்த குடிநீர் காரணமாக, மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியபிரதேச தலைநகர் இந்தூர் தொடர்ந்து 8வது முறையாக தூய்மை நகரம் விருதை கடந்தாண்டு வென்றது. ஆனால், மத்தியபிரதேசத்தில் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ ஆட்சியில், இந்தூரில் மாசடைந்த குடிநீர் விவகாரம் மக்களை இன்னலில் ஆழ்த்தி உள்ளது. இந்தூரின் பகீரத்புரா பகுதியில் மாநகராட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்ட மாசடைந்த குடிநீர் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு 15 பேர் பலியாகி விட்டனர். இதனால் மாநகராட்சி விநியோகிக்கும் தண்ணீரை வாங்க மக்கள் பயப்படுகின்றனர்.
இதுபற்றி மொஹல்லாவில் வசிக்கும் சுனிதா கூறுகையில், “எங்கள் பகுதியில் கடந்த 2,3 ஆண்டுகளாக குழாய்களில் வரும் தண்ணீர் அழுக்காக உள்ளது. இதுபற்றி புகார் சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது, படிகாரம்( நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தும் சல்பேட் உப்பு) மூலம் தண்ணீரை சுத்தம் செய்து, கொதிக்க வைத்து குடிக்கிறோம். அத்துடன் கடைகளில் ரூ.20, ரூ.30க்கு பாட்டில் தண்ணீரை வாங்குகிறோம்” என்றார். இதனிடையே, பகீரத்புரா பகுதியில், அரசு சாரா நிறுவனங்கள் மூலம், சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்துவது பற்றி உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
* மன்னிப்பு கேட்க வேண்டும்: உமாபாரதி விளாசல்
மத்திய பிரதேசத்தில் அசுத்தமான குடிநீர் குடித்து மக்கள் உயிரிழந்த சம்பவத்தில் பாஜ மூத்த தலைவர் உமா பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் மாநிலத்திற்கே அவமானம் மற்றும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது முதல்வர் மோகன் யாதவ் தலைமைக்கு பெரிய சோதனை. மக்கள் விஷத்தன்மை கொண்ட நீரை குடிக்க நேரிட்டது பெரும் பாவம். இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.
