திருவொற்றியூர் விம்கோ நகரில் அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு: குடும்பத்தினர் ஓட்டம்

திருவொற்றியூர், ஜன.3: திருவொற்றியூர் விம்கோ நகர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். நேற்று காலை இவரது வீட்டிற்குள் குட்டி மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்துள்ளனர். பின்னர், இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை தேடிய போது, கழிவுநீர் செல்லும் பாதையில் மறைந்து இருந்தது தெரிந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த பாம்பை பிடித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பிடிபட்ட பாம்பை மீட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இது மலைப் பிரதேசங்களில் கற்களுக்கிடையே காணப்படும் அரிய வகை கருப்பு வால் மலைப்பாம்பு, மலைப் பாம்புகளை போலவே, இந்த வகை பாம்பும் தனது சக்திவாய்ந்த உடலை பயன்படுத்தி இரையை விழுங்கும் தன்மை கொண்டது,’ என்றனர்.

Related Stories: