சென்னை, ஜன.3: நங்கநல்லூர் 5வது பிரதான சாலையிலிருந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதை வரை நேரடி இணைப்பு சாலை அமைக்க, சென்னை மாநகராட்சி 29.57 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பழவந்தாங்கல் முக்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மக்கள், கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலைக்கு செல்ல பழவந்தாங்கல் ரயில்வே சுரங்கப்பாதையை தான் அதிகம் நம்பியுள்ளனர். நங்கநல்லூர், வாணுவம்பேட்டை, உள்ளகரம், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் போன்ற சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் நேரடி சாலை இல்லாததால், வாகனங்கள் குறுகலான குடியிருப்பு சாலைகளில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் இந்த சுரங்கப்பாதை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்ற சுரங்கப்பாதைகளைப் போலல்லாமல், இங்கிருந்து வெளியேறும் வாகனங்கள் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும். வேம்புலி அம்மன் கோயில் தெரு அருகே உள்ள சந்திப்பில் சிலர் ஒருவழிப்பாதையில் சட்டவிரோதமாக கல்லூரி சாலையை அடைய முயன்றனர். பள்ளி மாணவர்களும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
பழவந்தாங்கல் சுரங்கப்பாதை 1997ம் ஆண்டு கட்டப்பட்டது. நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இந்த சுரங்கப்பாதையை நங்கநல்லூர் 5வது பிரதான சாலையுடன் நேரடியாக இணைக்கும் சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாலை சுமார் 120 மீட்டர் நீளம் இருக்கும். சாலை மற்றும் கட்டிடங்கள் துறை 1,069 சதுர மீட்டர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இதில் ஒரு சிறிய பகுதி அரசுக்கு சொந்தமானது. மீதமுள்ள 979 சதுர மீட்டர் தனியார் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 17 குடியிருப்பு கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது. இதில் 14 கட்டிட உரிமையாளர்கள் தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நங்கநல்லூர் பகுதி மக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக பல துறைகளை அணுகினோம். ஆனால், இந்த திட்டம் சாத்தியமில்லை என்று கூறினார்கள். நீண்ட கால கோரிக்கையை ஏற்று தற்போது, இந்த இணைப்பு சாலைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால், தினமும் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘இந்த திட்டத்தை மேற்பார்வையிட ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஒரு முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், பணிகள் தொடங்கும்,’ என்றார்.
இந்த புதிய சாலை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை நங்கநல்லூர் 5வது பிரதான சாலையுடன் நேரடியாக இணைக்கும். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். மேலும், குறுகலான குடியிருப்பு சாலைகளில் வாகனங்கள் செல்வது தவிர்க்கப்படும். இது விபத்துகளைக் குறைக்கவும் உதவும். நிலம் கையகப்படுத்தும் பணி முக்கிய கட்டமாக உள்ளது. தனியார் நிலங்கள் மற்றும் சில குடியிருப்பு கட்டிடங்கள் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிய இந்த திட்டம் தற்போது செயல்வடிவம் பெறுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
