×

மது போதையை விட ஆபத்தான மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: மது போதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சாதி மத பேதமில்லா சகோதரத்துவம் தழைக்கவும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சி மீண்டும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருச்சியில் இருந்து மதுரை வரை “சமத்​துவ நடைபயணம்” என்​கிற பெயரில் நடைபயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ அறிவித்தார்.

ஜன.2ம் தேதி திருச்சியில் துவங்கி ஜன.12ம் தேதி மதுரையில் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையிலிருந்து விமானத்தில் காலை 9.05 மணிக்கு திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், எம்பி அருண்நேரு, திருச்சி கலெக்டர் சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் முதல்வர் காரில், சுப்பிரமணியபுரம், டோல்கேட், தலைமை தபால் நிலையம், நீதிமன்றம் வழியாக நடைபயண துவக்க விழா நடைபெறும் தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலுக்கு வந்தார். முன்னதாக, வழிநெடுக கட்சியினர், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தபால் நிலையம், ஒத்தக்கடை ஆகிய இடங்களில் மேடைகள் அமைத்து கரகாட்ட கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் முதல்வர் உழவர் சந்தை திடல் மேடைக்கு வந்தார். தொடர்ந்து, சமத்துவ நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
2026ம் ஆண்டின் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. தலைவர் கலைஞர் மதுரையில் இருந்து, திருச்செந்தூருக்கு “நீதி கேட்டு நெடும்பயணம்” நடத்திய நேரத்தில், அவருடைய கால்கள் கொப்பளிக்க நடந்து சென்றபோது, அவருக்கு பாதுகாவலராக அவருடனே நடந்தவர் தான் அண்ணன் வைகோ.

இன்றைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் படையுடன் ‘சமத்துவ நடை பயணம்’ நடத்துகிறார். போதை பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான கருத்துகளை வலியுறுத்தி அண்ணன் வைகோ தொடங்கியிருக்கும் இந்த சமத்துவ நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறத்தான் போகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும்.

அதில் எந்த கருத்து மாறுபாடும், வேறுபாடும் கிடையாது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறது. அதன் மூலமாக, முழுமையாக அல்ல ஓரளவிற்கு பலனும் கிடைத்து கொண்டிருக்கிறது. ஆனால், ரொம்ப முக்கியமானது, அந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்த பழக்கத்தை கைவிட வேண்டும்.

அவர்களுடன் இருப்பவர்கள், அவர்களை திருத்த வேண்டும். போதை பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் ஏராளமான போதை வஸ்துகள் நாட்டுக்குள் வருகின்றன. அதிகப்படியான போதை பொருட்கள் எந்தெந்த துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைகிறது என்று நாம் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம். இந்த நுழைவாயில்களை நாம் அடைத்தாக வேண்டும்.

நாட்டின் எல்லைக்குள் போதை பொருட்கள் வருவதையும் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும், ஒன்றிய அரசின் முகமைகள் தீவிரமாக கண்காணித்து, அதை தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அரசுகளும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக நான் சொல்கிறேன், கடந்த சில மாதங்களில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளை பிடித்திருக்கிறோம்.

இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று, இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள், நைஜீரியா, செனகல் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெட்வொர்க்கை ஒழிக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

நம்மை பொறுத்தவரைக்கும், போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் துறைகள், ஒன்றிய அரசின் துறைகளுடனும், அண்டை மாநிலக்காவல் துறையினருடனும் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட்டு வருகிறது என்பதை நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக, கலை துறையை சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் தங்களின் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

போதையின் தீமைகளை சொல்வதில் தவறில்லை. அதை விதந்தோதுவது (குளோரிஃபை செய்வது) ஒரு தலைமுறையையே சீரழித்துவிடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தை மேல் பாசம் காண்பிக்க வேண்டும் தான். அதை மறுக்க முடியாது. அதற்காக, அவர்கள் பாதை மாறிப் போகும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது. யூடியூப், இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக எளிதில் கிடைக்கும் பணம், பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எனவே, குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக, அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி என்று வீட்டில் இருக்கும் சொந்தங்கள், நம்முடைய வீட்டு பிள்ளைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேச வேண்டும். மனசு விட்டுப் பேசினாலே பாதி பாரம் குறைந்து விடும். தவறான பாதைக்கு செல்ல வேண்டிய தேவை நிச்சயமாக இருக்காது.

ஆசிரியர்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் என்று அனைவருமே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து பரப்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து இன்றைக்கு நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்னை என்றால், அது சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கூட, இப்போது வெறுப்பு பேச்சுகளை பேசியும், இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் விதமாகவும் செயல்படுவதை பார்க்கிறோம்.

தனிப்பட்ட முறையிலான அவர்களின் கொள்கைகளுக்காக, நம்முடைய இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் சீரழிக்கும் நாசகார வேலையில், அவர்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அனைவரும் அச்சத்தில் வாழும் ஒரு நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அண்மையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அந்த சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களை பற்றி அனைவருக்கும் தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய நாட்டில் இந்த நிலைமை இருந்ததா?. ஊரே ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் கடந்து, ஒருவருக்கு ஒருவரை எதிரியாக கட்டமைக்கும் வேலையை, பிளவுவாத சக்திகள் இன்றைக்கு தெளிவாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அன்பு செய்ய சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை, சில கும்பல்கள் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தான் அண்ணன் வைகோ இந்த சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

திராவிட இயக்கத்திற்கு பல்வேறு திருப்புமுனைகளை கொடுத்த நகர்தான், இந்த திருச்சி நகர். வைகோ அவர்களின் இந்த நடைப்பயணமும் நிச்சயமாக புது வரலாற்றை படைக்கும். இந்த நடைப்பயணத்தின் தாக்கத்தை, சமூக வலைதளங்களுக்கும் கொண்டு சேர்த்து, இளைஞர்களிடையே பேசுபொருள் ஆக்க வேண்டியது ஊடகங்கள் மற்றும் நம் அனைவரின் கடமை.

மதுபோதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாக புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது. அண்ணன் வைகோ அவர்களின் இந்த சமத்துவ நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* நடை பயணத்தில் 600 தொண்டர்கள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் நடைபயணத்தில் 600 தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்காக தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வைகோவுடன் நடைபயணம் செல்கின்றனர்.

* மதுபோதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்.

* இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதில் எந்த கருத்து மாறுபாடும், வேறுபாடும் கிடையாது.

* போதை பொருட்களின் புழக்கம் என்பது, மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை அழிக்க, மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

* அதிகப்படியான போதை பொருட்கள் எந்தெந்த துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைகிறது என்று நாம் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம். இந்த நுழைவாயில்களை நாம் அடைத்தாக வேண்டும்.

* நாட்டின் எல்லைக்குள் போதை பொருட்கள் வருவதையும் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும், ஒன்றிய அரசின் முகமைகள் தீவிரமாக கண்காணித்து, அதை தடுக்க வேண்டும்.

Tags : M. K. Stalin ,Trichy ,Tamil Nadu ,First Minister ,K. Stalin ,Model ,
× RELATED ரூ.3 கோடியில் கட்டப்பட்ட பெரியசூரியூர்...