×

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி நாளை அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: வேலுநாச்சியார் பிறந்த நாளையொட்டி நாளை அமைச்சர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாளை காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அம்மையாரது திருவுருவச் சிலைக்கும், காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730ஆம் ஆண்டு பிறந்த வீரமங்கை இராணி வேலுநாச்சியார். சிறுவயதிலே வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் இராணியானார். 1772ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாகப் போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார். பின்னர், வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்கள், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியை ஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கை சீமையை 1780ஆம் ஆண்டு மீட்டார்.

அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக 2ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி” வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் 25.12.1976 அன்று மறைந்து அழியாப் புகழ் பெற்றார். தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை இராணி வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தினை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், 2024 – 2025ஆம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்னை. கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, நிறுவப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவச் சிலை முதலமைச்சர் 19.9.2025 அன்று திறந்து வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அம்மையாரது பிறந்த நாளான ஜனவரி 3ஆம் நாள், அமைச்சர்கள், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கும், சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து. மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர். உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags : Government of Tamil Nadu ,Veerangana Veeramanga Rani Velunachiyar ,Chennai ,Velunachiya ,Veeramanga Veeramangai Rani Velunachiyar ,Tamil Nadu ,
× RELATED 2025ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோவில் 11.20 கோடி பேர் பயணம்