- நெல்லை அருங்காட்சியக மலை
- நெல்லை
- ரெடியார்பட்டி மலை
- பொருநை அருங்காட்சியகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நெல்லை...
நெல்லை: தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில், உயிரைப் பணயம் வைத்து கல்லூரி மாணவர்கள் செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையின் புதிய அடையாளமாக மாறியுள்ள பொருநை அருங்காட்சியகத்தின் பின்னணியில் உள்ள மலை உச்சியில், பிரமாண்டமான வரையாடு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய சூழலையும், அதன் அருகே மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்தையும் ஒரே புகைப்படத்தில் அடக்க வேண்டும் என்ற பேராசையில், இளைஞர்கள் விபரீத முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உயரத்தில், செங்குத்தான பாறைகளின் விளிம்பில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மாணவர்கள் நின்று கொண்டு செல்பி எடுப்பதும், வீடியோக்களுக்காக ரீல்ஸ் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. கால் சறுக்கினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், சமூக வலைதளப் புகழுக்காக மாணவர்கள் காட்டும் இந்த அதீத துணிச்சல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு வருகின்றனர். மலையின் உச்சியில் ஆபத்தான இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க எவ்விதத் தடுப்புகளும் இல்லை. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் நடவடிக்கை வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக எச்சரிக்கை பலகைகளையும், பாதுகாப்பு வேலிகளையும் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
