×

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்; சுவிட்சர்லாந்து தீ விபத்து பலி 47 பேர் ஆக உயர்வு: 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு

 

மான்டனா: சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 47 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் அல்பைன் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மான்டனா என்ற சுற்றுலாத் தளத்தில் ‘லீ கான்ஸ்டலேஷன்’ என்ற புகழ்பெற்ற இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தன. அதிகாலை 1.30 மணியளவில், கொண்டாட்டத்தின் உச்சத்தில் பணியாளர் ஒருவர் மது பாட்டிலில் இருந்த பட்டாசு மத்தாப்புடன் கூட்டத்தில் வலம் வந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தத் தீப்பொறி விடுதியின் தாழ்வான மரத்தாலான மேற்கூரையில் பட்டது.

இதனால் உருவான தீ, வாயுக்களுடன் கலந்து கண் இமைக்கும் நேரத்தில் விடுதி முழுவதும் பரவி பெரும் விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஒரே ஒரு குறுகிய வெளியேறும் வழியை நோக்கி ஓடினர். கூட்ட நெரிசலிலும், தீயிலும் சிக்கி 47 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 115 பேர் படுகாயமடைந்த நிலையில், 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு ஜெனிவா மற்றும் அண்டை நாடுகளான இத்தாலி, ஜெர்மனி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர் பிழைத்தவர்கள் கூறுகையில், ‘மக்கள் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் ஓடியது திகில் படம் போல இருந்தது’ என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் இதனை, ‘நாட்டின் மிக மோசமான துயரங்களில் ஒன்று’ என்று குறிப்பிட்டு 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags : New Year ,Switzerland ,Le Constellation ,Crans-Montana ,Alpine ,
× RELATED ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு...