புத்தாண்டு கொண்டாட்டத்தில் ட்ரோன் தாக்குதல்; ரஷ்ய பகுதியில் 24 பேர் உடல்சிதறி பலி: உக்ரைன் மீது கடும் கோபத்தில் ரஷ்யா

 

மாஸ்கோ: ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தின் கோர்லி என்ற கடற்கரை கிராமத்தில் உள்ள தங்கும் விடுதி மற்றும் உணவகத்தில் நேற்று அதிகாலை பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த உக்ரைனின் 3 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) திடீரென குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு ட்ரோன் தீப்பற்ற வைக்கும் குண்டுகளை வீசியதால் அப்பகுதி முழுவதும் தீயினால் சூழப்பட்டது. இந்த கோர விபத்தில் சிறுவன் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சாகரோவா கூறுகையில், ‘இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் மேற்கத்திய நாடுகளே இதற்குப் பொறுப்பு’ என்று குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், ராணுவ மற்றும் எரிசக்தி நிலையங்களை மட்டுமே குறிவைத்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதின் மீது டிரம்ப் பாய்ச்சல்
உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வரும் நிலையில், நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள தனது குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, இனிமேல் பேச்சுவார்த்தையில் கடுமையான போக்கை கடைபிடிக்கப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தத் தாக்குதல் சம்பவம் பொய்யானது என அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே உறுதி செய்திருந்தது. இந்நிலையில் நேற்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழின் தலையங்கத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘புதின் வடிப்பது நீலிக்கண்ணீர்; அமைதிக்குத் தடையாக இருப்பது ரஷ்யாதான்’ என்று மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், உக்ரைனின் பொதுக்கட்டமைப்புகளைத் தொடர்ந்து அழித்து வரும் ரஷ்யா, தங்கள் மீது தாக்குதல் நடப்பதாகக் கூச்சலிடுவது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் இந்தப் பதிவை பகிர்ந்திருப்பதன் மூலம், ரஷ்யா மீதான தனது மென்மையான போக்கை மாற்றி, இனி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகிவிட்டதையே இது காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories: