×

ஆரணி அருகே இரவு நேரத்தில் பைக்குகளை திருடும் முகமூடி கும்பல்:வீடியோ வைரல்

ஆரணி, ஜன.1: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியப்பாடி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி என்பவரது மகன் அரவிந்தன்(27). இவர், ஆரணியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி வழக்கம் போல் அரவிந்தன், பைக்கை பிரியாணி கடை அருகில் நிறுத்தி விட்டு வேலை செய்து கொண்டிருந்துள்ளார். பின்னர் இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கம் எங்கு தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதனால், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோது, 2 முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் அரவிந்தன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதேபோல், ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான புருஷேத்தமன்(40), கடந்த 24ம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மேலும், ஆரணி அருகே பிரியாணி கடை மற்றும் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை மர்ம நபர்கள் 2 பேர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்டுள்ள பைக்குகளை மர்ம ஆசாமிகள் மற்றும் மூகமுடி கொள்ளையர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags : Arani ,Aravindan ,Muniandi ,Ariyapadi Thangal village ,Tiruvannamalai district ,
× RELATED வெள்ளி பொருட்கள் திருடிய வேலூர்...