செய்யாறு, ஜன.1: செய்யாறு அடுத்த அத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கமலா(65), அஞ்சலா(60) என இரு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சுப்பிரமணி தனது இரு மனைவிகளுடன் அத்தி மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கமலா கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைக்கு சென்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது 2 மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல் நடித்து திடீரென கத்தியை காட்டி மிரடடி இரண்டரை சவரன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீசாருக்கு விரைந்து வந்தனர். மேலும் செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள தைலம் தோப்பில் மது அருந்தியதும், பின்னர் மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் நேற்று போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள பகுதிகளில் எங்கேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
