×

எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும் பொய் மூட்டைகள் அவிழ்த்து கொட்ட கொட்ட மொத்த கூட்டமே காலியாகி விடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்

ஆலந்தூர்: சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் திராவிட மாடல அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடந்தது. கூட்டத்திற்கு பெருங்குடி 14வது மண்டல குழு தலைவரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி பிரபாகர ராஜா முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி எங்கே சென்றாலும் பொய்யாய் பேசி வருகிறார். இந்த பகுதியில் அவர் சொன்ன பொய் கொஞ்சம் நஞ்சமல்ல, பொய் மூட்டையை அவிழ்த்து கொட்ட கொட்ட அங்கிருந்த கூட்டம் மொத்தமாக காலியாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய அளவில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதை ஈசிஆரில் இருந்து ஓஎம்ஆர் சாலையை இணைக்க கூடிய வகையில் ரூ.204 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதல்வரை குறை சொல்ல எடப்பாடிக்கு தகுதி இல்லை. விடியல் பயணம் மூலம் இதுவரை 699 லட்சத்து 50 ஆயிரம் பயணங்கள் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் திருநங்கைகள், திருநம்பிகள் 47 கோடியே 21 லட்சம் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர், என்றார்.

தொடர்ந்து திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி இந்த ஆட்சி. பெண்ணுக்கு தங்க நகையும் தேவை, அழகும் தேவை. அதை விட மிகப்பெரிய உயர்ந்த சொத்து எது தெரியுமா கல்விதான். அந்த கல்வி என்ற அறிவு ஆயுதத்தை கொடுத்தது திமுக. மாற்றுத்திறனாளி பெண் பேட்மிட்டனில் ஒலிம்பிக்கில் மூன்று தங்க பதக்கம் பெற்றுள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவியின் திறமையை வெளிக்கொண்டு வந்ததுபோல் 7 லட்சம் பெண்கள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். உலகமே பாராட்டுகிற மருத்துவத்துறை நமது துறை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அம்மா மினி கிளினிக் என கூறுகிறார், என்றார்.

இக்கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் மதியழகன், வெங்கடேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாலவாக்கம் சோமு விஸ்வநாதன், மு.மனோகரன், ஏழுமலை, சங்கீதா, பாரதி ராஜன், சந்திரபாபு, ரத்னா யோகேஸ்வரன், அரிகிருஷ்ணன், மற்றும் வட்ட செயலாளர்கள் வ.பாபு, சங்கர், முருகேசன் ஏகாம்பரம், தேவராஜன், ஜெ.கே.மணிகண்டன், ஜெ.திவாகர், ரஞ்சித் குமார், செல்வம், எம்.கே.ஜெய், கவுன்சிலர் சமீனா செல்வம் செர்லி ஜெய், தமிழரசி சோமு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi Palanisami ,Minister ,Ma. Subramanian ,Alandur ,Kandan ,Dravita ,Dimuka ,Choshinganallur ,Perungudi 14th Zonal Committee ,Sochhinganallur West Region ,S. V. Ravichandran ,Tamizachi Thangabandian ,
× RELATED 2024ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு...