எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்களை கேட்கும் முடிவை கைவிட வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாரை மட்டுமே ஆவணமாக ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் காலம் டிசம்பர் 19 அன்று தொடங்கி ஜனவரி 18, 2026 வரை தொடரும். டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி ஆகும். சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் 5.43 கோடியாக குறைந்துள்ளனர். டிசம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்காக (படிவம் 6 மற்றும் 6A) 7,32,367 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக் கோரி (படிவம் 7) 9,450 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். சமீபத்தில், விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் (டிசம்பர் 27 மற்றும் 28) மட்டும், 5.58 லட்சம் பேர் பெயர் சேர்க்கவும், 8,260 பேர் பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

Related Stories: