×

எல்லையில் இனிமேல் எதிரிகள் கலக்கம்; ‘பினாகா’ ஏவுகணை சோதனை வெற்றி: ஒன்றிய ராணுவ அமைச்சர் பாராட்டு

பாலசோர்: நீண்ட தூரம் சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கும் அதிநவீன பினாகா ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உள்நாட்டிலேயே ‘பினாகா’ ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. ஏற்கனவே 40 கி.மீ. மற்றும் 75 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், 120 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் நீண்ட தூர ‘பினாகா’ ரக ஏவுகணை புதிதாக வடிவமைக்கப்பட்டது.

இந்த புதிய ஏவுகணையைச் செலுத்துவதற்குப் புதிய வாகனங்கள் எதுவும் தேவையில்லை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லாஞ்சர்கள் மூலமே இதனை இயக்க முடியும். இந்நிலையில் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில், நேற்று (29ம் தேதி) இந்த ஏவுகணை முதன்முறையாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட 120 கி.மீ. தூரத்திலுள்ள இலக்கை இந்த ராக்கெட் ‘மிகத் துல்லியமாக’ தாக்கி அழித்துச் சாதனை படைத்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்ற அதே நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராணுவத்திற்கு இந்த ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘இது ஒரு ஆட்டத்தை மாற்றும் தருணம், இதன் மூலம் ராணுவத்தின் தாக்குதல் திறன் மற்றும் ஆளுமை பன்மடங்கு உயரும்’ எனப் பாராட்டினார். இந்த ஏவுகணை முழுப் பயன்பாட்டிற்கு வரும்போது, வெளிநாட்டு ஆயுதங்களை விட இதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என ராணுவத் தளபதி உபேந்திர திவேதி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Tags : Union Defence ,Minister ,Balasore ,Odisha ,Defence Research and Development Organisation ,DRDO ,Pune, Odisha ,
× RELATED புத்தாண்டு விழா கொண்டாட்டம்;...