சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரேமலதா தலைமையில் அமைதி பேரணி நடந்தது. இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர். கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று காலை அமைதி பேரணி நடைபெற்றது. கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை தேமுதிகவினர் பேரணியாக சென்றனர். அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியாக வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பிரபாகர்ராஜா எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும், திரைப்பட இயக்குநர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
