பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு

சென்னை: சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இந்து சமய அறக்கட்டளை கட்டுப்பாட்டில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக சிங்கபெருமாள்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் கணக்கில் காலி மனைகள் உள்ளன. இதுபோன்ற கோயில் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டி வருகின்றனர்.

இதனை கண்டறிந்து அதனை கையகப்படுத்தும் வகையில் அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட ஜேஜே நகரில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் காலிமனையில் நிறைய ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி காலி பண்ணுவதற்கு அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் அவகாசம் வழங்கப்பட்டும் இடத்தைவிட்டு காலிசெய்யாததால் அறநிலையத்துறை சார்பில் நில மீட்புக்குழு வட்டாட்சியர் கவிதா தலைமையில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ.10.66 கோடி மதிப்பிலான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று அகற்றப்பட்டது.

Related Stories: