×

நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு: சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்

புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் பிரமுகர்கள் உள்பட மேலும் 60 பேர் கொண்ட பட்டியலை தயாரித்துள்ள புதுச்சேரி போலீசார், அவற்றை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் புதுச்சேரி வரும் சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு விசாரணையை துவங்க உள்ளதால் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடிக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியான போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா, மாஜி ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, முக்கிய பங்குதாரரான என்ஆர் காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட 24 பேர் கைதாகினர். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும் போலி மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள், குடோன்களில் ஆய்வு நடத்தி 13 இடங்களுக்கு சீல் வைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்பி நல்லாம்பாபு தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் அவர்களும் தீவிர விசாரணை நடத்தி மோசடி தொடர்பான ஆவணங்களை திரட்டினர். முக்கிய குற்றவாளியான ராஜாவையும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த திடுக்கிடும் தகவலின்பேரில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்த அபிஷேகப்பாக்கம் ஜெகன் மருதமுத்து (42), சொக்கலிங்கம் (43) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடியில் தொடர்புடையதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழு அடையாளம் கண்டிருந்த நிலையில் இதுவரை மொத்தம் 26 பேர் இவ்வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளனர். இதனிடையே போலி மருந்து தயாரித்த முக்கிய குற்றவாளியான ராஜா, ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கு மாஜி ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உடந்தையாக இருந்து, கையூட்டு பெற்றிருப்பது ஆதாரங்களுடன் சிக்கியிருந்த நிலையில் அவரை காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் தொடர்பு, ரசாயன மருந்துகள் கொள்முதல், பண பரிவர்த்தனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வழக்கை சிபிஐ, என்ஐஏக்கு மாற்ற கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கையை கவர்னர் மேற்கொண்ட நிலையில் தற்போது இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதம் புதுச்சேரி சிபிசிஐடிக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தியை காவலில் எடுக்கும் முடிவை மாற்றியமைத்த சிபிசிஐடி போலீசார், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை நிறுத்தியது. அதேவேளையில் இவ்வழக்கு தொடர்பான முழு ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தயாராகி வருகிறது.

குறிப்பாக ராஜா அளித்த வாக்குமூலத்தின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், போலி மருந்து தொழிற்சாலை நடத்த உதவி செய்த அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், அதிகாரிகள், நண்பர்கள், தாதாக்கள், தொழிலதிபர்கள், பார்மசிஸ்டுகள் உள்ளிட்டோர் அடங்கிய மேலும் 60 பேரின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் தயாரித்துள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் சென்னையில் இருந்து இவ்வழக்கு விசாரணைக்காக அமைக்கப்படும் சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வருகை தருகின்றனர்.

அவர்களிடம் சிபிசிஐடி தனது விரிவான அறிக்கையை ஒப்படைக்க உள்ளது. அப்போது போலி மருந்து மோசடி தொடர்பாக சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வு குழு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட விசாரணையில் சிபிஐ முழுவீச்சில் இறங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சில முக்கிய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளை சிறப்பு புலனாய்வு குழு நெருங்க முடியாமல் இருந்த நிலையில் சிபிஐ அதிரடி விசாரணையில் இறங்கும்பட்சத்தில் மேலும் பலர் அடுத்தடுத்து இவ்வழக்கில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் என்ஐஏ-வும் இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் புதுச்சேரி மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளும், அதிகாரிகளும் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

* என்ஆர் காங்., நிர்வாகி அதிரடி நீக்கம்
போலி மருந்து தொழிற்சாலை நடத்திய தொழிலதிபர் ராஜாவிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில் முக்கிய பங்குதாரரான புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் நிர்வாகியான மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கூறிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Tags : Puducherry ,CBI ,Puducherry police ,
× RELATED ராகுல், பிரியங்கா, கார்கே விரைவில்...