- பராசக்தி
- சிவகார்த்திகேயன்
- திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
- சென்னை
- ரவிமோகன்
- ஆதர்வ
- சுதா கொங்கரா
- ஆகாஷ் பாஸ்கரன்
- டான் பிக்சர்ஸ்
சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், தனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளார். பின்னர், புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டு தற்போது பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி கதையையும், பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன், படத்தின் இயக்குனர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், தயாரிப்பாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இரு கதைகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த மனுவுக்கு ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பதில் தர வேண்டும். மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
