×

2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரினை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து ஜனவரி 20ம் தேதி (செவ்வாய்) காலை 9.30 மணிக்கு கூட்டுறவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினமே ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர், அமைச்சர்களால் தயாரித்து வழங்குகின்ற கவர்னர் உரையை இந்திய பேரவைக்கு வாசித்து அளிப்பார்.

ஆளுநர் உரை வாசித்து முடித்ததும், அன்றைய தின கூட்டம் முடிவு பெறும். பின்னர் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடைபெறும் என்று கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும். ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில்தான் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததில் இருந்து, தமிழக சட்டப்பேவையில் கவர்னர் உரை சர்ச்சையில்தான் முடிந்து உள்ளது. 2023ம் ஆண்டு நடந்த முதல் கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துகளை சேர்த்து பேசினார். குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்கவில்லை. இது ஆளும் தரப்பை ஆவேசப்படுத்தி ஆளுநருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அவர் முன்னிலையிலேயே வாசிக்க வழி வகுத்தது. அப்போது தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.

அதேபோல் 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போதும், தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் குறித்த சில கருத்துகளை மட்டும் தெரிவித்து விட்டு உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இதேபோல் 2025ம் ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டப்பேரவை தொடங்கியபோது சட்டசபையில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே பேரவையில் இருந்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில், இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

அந்த பதிவில் தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அரசியலமைப்பு சட்டத்தையும், தேசிய கீதத்தையும் அவமதிக்கும் நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்க கூடாது என்பதற்காக ஆளுநர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கமாக தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கூட்ட முடிவில் தேசியகீதமும் இசைக்கப்படுவதுதான் தமிழக சட்டப்பேரவையில் காலகாலமாக நடைபெறும் மரபாகும். இதுபோன்று தமிழக ஆளுநருக்கும் – அரசுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியான சர்ச்சைகளில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 20ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா அல்லது ஏதாவது கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : 2026 general elections ,Tamil Nadu Legislative Assembly ,Governor R.N. Ravi ,Speaker ,Appavu ,Chennai ,session ,Tamil Nadu government ,Governor ,R.N. Ravi ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி