×

பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் முற்றுகையில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்து இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் டிபிஐ வளாகம் அருகே கூடிய இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது நுங்கம்போக்கம் போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வியிலும் பொருளாதாரத்திலும் சிறந்த தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வேறுபாடுகள் உள்ளன.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியங்களை பொருத்தவரையில் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் குறைவாக உள்ளது. ஒரே பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி நாங்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கடந்த தேர்தலின் போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு வருகிறோம். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Chennai ,TPI ,Tamil Nadu ,
× RELATED பொருநை அருங்காட்சியகத்திற்கு...