புதுடெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக சட்டீஸ்கரில் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாமில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மபியில் கும்பல் மீது விசாரணை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனையின் போது பா.ஜ ஆளும் மாநிலங்களான டெல்லி, சட்டீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், அசாம், மபியில் சில கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒடிசாவில் ஒரு கும்பல் சாண்டா கிளாஸ் தொப்பிகளை விற்கும் விற்பனையாளர்களை தாக்கினர்.
டெல்லி: டெல்லியில் சாண்டா தொப்பிகளை அணிந்திருக்கும் பெண்களை குறிவைத்து பஜ்ரங் தளம் மிரட்டியது. ராஜஸ்தானிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஒடிசா: ஒடிசாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சாண்டா தொப்பிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெரு வியாபாரிகளை பா.ஜ குழு ஒன்று மிரட்டி, கைகளை முறுக்கி தாக்கியதைக் காட்டும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அசாம்: அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், அங்குள்ள பனிகாவூன் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலப் பள்ளியில் 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தது. பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள், விளக்குகள் மற்றும் பதாகைகளை அந்த கும்பல் கிழித்து எறிந்து தீயிட்டு கொளுத்தியதுடன், அங்கிருந்த கிறிஸ்துமஸ் குடில் மற்றும் ஏசு கிறிஸ்துவின் சிலையையும் சேதப்படுத்தியது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் பாதிரியார் பைஜு செபாஸ்டியன் அளித்த புகாரின் பேரில் பெல்சோர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விஎச்பி நல்பாரி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் டெகா, மாவட்டத் துணைத் தலைவர் மனஷ் ஜோதி பாட்கிரி, உதவிச் செயலாளர் பிஜு தத்தா, பஜ்ரங் தளத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நயன் தாலுக்தார் ஆகியோர் ஆவர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சட்டீஸ்கர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கான்கேர் மாவட்டத்தில் நடந்த மோதல்கள் மற்றும் மத மாற்றத்தை கண்டிப்பதாகக் கூறி பஜ்ரங் தளம் மற்றும் சர்வ இந்து சமாஜ் அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ராய்ப்பூரில் விஐபி சாலையில் உள்ள மேக்னட்டோ வணிக வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில் முகமூடி அணிந்த 30 முதல் 40 பேர் கொண்ட கும்பல் கையில் தடி மற்றும் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கி சூறையாடியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார், அடையாளம் தெரியாத 40 பேர் மீது கலவரம் செய்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பார்வையற்ற மாணவர்களை மதம் மாற்றியதாக கூறி ஹவாபாக் மகளிர் கல்லூரிக்குப் பின்னால் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் பாஜ மாவட்ட துணைத் தலைவர் அஞ்சு பார்கவாவுடன் பல பா.ஜ தொண்டர்கள் நுழைந்து பார்வை குறைபாடுள்ள ஒரு பெண்ணின் கையைப் பிடித்து முறுக்கி தாக்கிய காணொலி பரவி உள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இந்தூரில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை ஒரு குழுவினர் வலுக்கட்டாயமாக அகற்றினர். இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி இந்தூர் கூடுதல் துணை ஆணையர் ராஜேஷ் தண்டோட்டியா அந்தக் காணொலியை உறுதிப்படுத்தினார். வீடியோவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* ஒருவரை கூட விடக்கூடாது மேகாலயா பாஜ கண்டனம்
மேகாலயா மாநில பாஜ தலைமை செய்தித் தொடர்பாளர் மரியாஹோம் கார்கிராங் கூறுகையில்,’ கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைத்த செயல்கள் இந்திய நாகரிகத்தின் அடிப்படைக்கே எதிரானவை. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட எந்தவொரு தனிநபரும் தண்டனையிலிருந்து தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
