ஜீவனாம்ச வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

பெங்களூரு: ஜீவனாம்ச வழக்குகளைக் காரணம் காட்டி கணவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு குடும்ப நல நீதிமன்றம், ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் கணவர் ஒருவர் வெளிநாடு செல்ல முடியாத வகையில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்திருந்த போதிலும், அந்த நபர் பயணம் செய்ய முயன்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறி பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி லலிதா கண்ணகண்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள் உரிமையியல் சார்ந்தவை; இதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும் அதிகாரம் குடும்ப நல நீதிமன்றங்களின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. கிரிமினல் வழக்குகளில் தப்பியோடுபவர்களைத் தடுக்கவே இந்த நடைமுறை உள்ளது. ஜீவனாம்சத்தை வசூலிக்க சொத்து முடக்கம் மற்றும் வாரண்ட் போன்ற சட்டரீதியான மாற்று வழிகள் உள்ளன’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், ‘நீதிமன்றம் தடையை நீக்கிய பிறகும் லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெறாமல் இருப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது’ என்று கூறிய நீதிபதி, லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட தகவலை உடனடியாக குடியேற்றப் பிரிவுக்கு தெரிவிக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டதுடன், இதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Related Stories: