ஆந்திராவில் நந்தியாலா மாவட்டத்தில் கார் மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!

அமராவதி: ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதி நொறுங்கியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் திருப்பதிக்குச் சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நந்தியாலா பகுதியிலுள்ள கிராமங்களுக்கு இடையே கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அதிவேகமாக வந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி மறுபுறம் பாய்ந்தது. அப்போது ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் நசுங்கியது. காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். காரில் பயணித்த 4 பெரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: