- கலெக்டர்
- கள்ளக்குறிச்சி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாவட்ட சேகரிப்பாளர்கள்
கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலுகத்தை திறந்துவைத்து 2.16 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.
காலை 11 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே எ. சாத்தனூர் என்ற இடத்தில் சிட்கோ தொழில்பேட்டையில் ரூ.2.302 கோடி மதிப்பில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் காலணி உற்பத்திக்கான ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தியாகதுருகம் அடுத்த திம்மலையில் மாவட்ட திமுக சார்பில் பொறுப்பு அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் முதல்வர் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக, கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் 38.15 ஏக்கரில் ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பில் 8 தளங்களை கொண்ட புதிய கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். இதன் பின்னர் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், முதல்வரின் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள், நியாயவிலைக் கடைகள் முதலான 100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்துவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி 6 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் முதல்வர் திறந்துவைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு 1 கோடியே 95 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தையும் திறந்துவைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தாட்கோ சார்பில் கிராம அறிவு மையங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கான 386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன் பின் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா புறவழிச்சாலை பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வர் திறந்துவைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த 70 அடிஉயர கொடி கம்பத்தில் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார். முதல்வரின் பாதுகாப்பை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிக்கு வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் மேற்பார்வையில் 3200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
