×

பிரச்னை வரும் போது புத்தகம் படிப்பேன், டிவி பார்ப்பேன், வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன்: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர்; இளம் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலகலப்பான பேச்சு

சென்னை: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர் என்று இளம் விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கலகலப்பாக கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்வை தொடங்கி உள்ளார். இந்நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது விளையாட்டு வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அவருக்கு பிடித்த விளையாட்டு, இளமை காலம், விளையாட்டு துறையின் மீது ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு கேள்விளை எழுப்பினர். இவர்களது கேள்விகளுக்கு எல்லாம் புன்னகையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அவரது பதில் வருமாறு: கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கபில் தேவ்வை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வளர்ந்து முன்னுக்கு வந்தவர். இந்தியாவுக்கு முதல் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் அவர். கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி ஆகியோரையும் பிடிக்கும். எம்சிசி பள்ளியில் படித்த போது ஹாக்கி அணியில் இருந்தேன். ஹாக்கியும் பிடிக்கும். கிரிக்கெட்டும் பிடிக்கும். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தெருவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எனது தந்தையும் எங்களுடன் விளையாடி இருக்கிறார்.

நான் பவுலர். ‘ஆப் ஸ்பின்’ நன்றாக போடுவேன். நான் தலைவருக்கு பவுலிங் போட்டு இருக்கிறேன். அதே போன்று பள்ளியில் ‘புக்’ கிரிக்கெட் விளையாடுவோம். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது நான் ஆர்வமாக இருந்தேன். சேப்பாக்கம் மைதானத்தில் சினிமா நடிகர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியிலும் நான் விளையாடி இருக்கிறேன். நான் 3 விக்கெட் எடுத்தேன். டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிலம்பரசன் எனது எதிரணி. அவருடைய விக்கெட், நெப்போலியன் விக்கெட், இன்னொரு விக்கெட் ஞாபகம் இல்லை.

நான் 14 வயதிலேயே அரசியலில் இறங்கிவிட்டேன். அப்போதில் இருந்தே எனக்கு டென்ஷன் தான். இது எனக்கு பழகி போய்விட்டது. எனவே கவலைப்படுவதில்லை. பிரச்னைகள் வருகிற போது புத்தங்கள் படிப்பேன். டிவி பார்ப்பேன். பாடல் கேட்பேன். வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன். இதற்கு முன்பு விளையாட்டுத்துறை பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்றாக இருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் மைதானம் அமைக்க திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் கட்ட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதெல்லாம் நிறைவேறுகிற போது, இந்தியளவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது சாலையில் பார்த்தேன்.

25 பேராவது செல்போனை பார்த்தபடி நடந்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். இதில் இளைஞர்கள் நேரத்தை செலவிடுவதை விட, வாய்ப்பு கிடைக்கும் போது விளையாட்டுத்துறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நான் முழு நேர அரசியல்வாதியாக இருக்கிறேன். எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறோம். எனவே தோல்வியை கண்டு துவண்டு போய் விடக் கூடாது. தோல்வியை படிக்கட்டாக நினைத்துக்கொண்டு அதில் ஏறிதான் வெற்றியை நோக்கி போய் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கலந்துரையாடினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,MKS'… ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...