- தவேகா
- சென்னை
- விஜய் சதீஷ்
- சத்தியநாராயணன்
- திருப்பச்சூர் பிராமணர் தெரு
- பூண்டி
- திருவள்ளூர்
- பூண்டி தெற்கு ஒன்றிய தவேகா இளைஞர் அணி
சென்னை: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் பிராமணர் தெருவை சேர்ந்தவர் சத்ய நாராயணன் என்கிற விஜய் சதீஷ் (25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் பூண்டி தெற்கு ஒன்றிய தவெக இளைஞர் அணி செயலாளராகவும், திருப்பாச்சூர் 7வது வார்டு கிளைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்திலும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது திருப்பாச்சூர் கிளையில் வாழ்த்து கூறி பேனர் வைப்பதற்காக பிரிண்ட் செய்துள்ளார். அந்த வாழ்த்து பேனரில் அதே பகுதியைச் சேர்ந்த தவெக ஒன்றிய செயலாளர் விஜய்பிரபு என்பவரின் புகைப்படம் இல்லாமல் பேனரை பிரிண்ட் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு உடனடியாக சத்ய நாராயணனை தொடர்பு கொண்டு வாழ்த்து பேனரில் தன்னுடைய புகைப்படம் இல்லாமல் பேனர் வைக்கக் கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒன்றிய செயலாளர் விஜய்பிரபு ஒரு பேனரை பிரிண்ட் செய்து சத்திய நாராயணன் ஒட்டியிருந்த பேனர் மீது தனது பேனரை ஒட்டி மறைத்துள்ளார். இதைக் கண்ட சத்யநாராயணன் விஜய் பிரபுவுக்கு போன் செய்து, நான் செலவு செய்து ஒட்டிய பேனர் மீது நீங்கள் எப்படி வேறொரு பேனரை ஒட்டலாம் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்ளுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சத்யநாராயணன், ‘‘நீங்கள் தொடர்ந்து எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்..’’ என கூறியுள்ளார். ஆனால் அதை சட்டை செய்யாத விஜய்பிரவு, ‘‘அது உன் இஷ்டம்’’ என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் மனமுடைந்த சத்யநாராயணன் தனது வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காணாமல் போய்விட்டார். இதையடுத்து மருத்துவமனை சார்பில் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரை பிரிண்ட் செய்த தவெக இளைஞர் அணி செயலாளர் பினாயில் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
