சென்னை: தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான வரிமுறையில் சலுகை அளித்து, இரட்டை கட்டணத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் வில்லாக்களுக்கு வாங்குவோருக்கு சலுகை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, முதன் முறையாக பத்திரப்பதிவு செய்யப்படும் மேற்கண்ட புதிய கட்டிடங்களுக்கு கட்டுமான ஒப்பந்தத்தின்போது, 2023 டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பே முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தியிருந்தால், அதனை கட்டிடம் மற்றும் நிலத்துக்கான ஒருங்கிணைந்த மதிப்பில் இருந்து கழித்துக் கொண்டு பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்.
இதுதொடர்பாக அரசு கடந்த 19ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு முறையினால், அடுக்குமாடிகுடியிருப்புகள் மற்றும் தனிவீடுகளை வாங்குவோர் ஒரே சொத்துக்காக இரண்டு முறைவரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக கட்டுமான மேம்பாட்டாளர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரைப் பரிசீலித்த பதிவுத் துறைத்தலைவரின் பரிந்து ஏற்று இந்த இரட்டை கட்டண சுமையை தவிர்க்கும் விதமாக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய விதிகளின்படி, கடந்த 2023 நவம்பர் 30ம் தேதிக்கு முன்னதாக கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தவர்கள், அதன் பின்னர் (டிசம்பர் 1 ம் தேதி முதல்) தங்களது வீடுகளுக்கான ஒருங்கிணைந்த விற்பனை பத்திரத்தைப்பதிவு செய்யும் போது, ஏற்கனவே, ஒப்பந்த பதிவின் போது செலுத்திய தொகையை கழித்து கொண்டு மீதமுள்ள மீதமுள்ள தொகையை மட்டும் பத்திரப்பதிவு கட்டணமாக செலுத்தினால் போதும். இந்த சலுகையானது அடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து புதிய குடியிருப்பு திட்டங்களுக்கும் பொருந்தும்.
வீடு வாங்குவோர் பத்திரபதிவின் போது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான ஒப்பந்தம் மற்றும் அதற்காக செலுத்தப்பட கட்டண ஆதாரங்களை சமர்ப்பித்து இந்த விலக்கை கோரி பெற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டை வாங்குபவர் கட்டுமான ஒப்பந்தத்தின் போது செலுத்திய 2 சதவீத முத்திரை கட்டணத்தை விற்பனை பத்திரபதிவின் போது முழுமையாக ஈடுகட்டிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
