×

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை எதிரொலி; ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒகேனக்கல், மேட்டூரும் ‘களை’ கட்டியது

 

ஏற்காடு: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஏற்காட்டில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேட்டூர், ஒகேனக்கல்லிலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு இடங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். கடந்த மாதம் தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு, மாணவர்களுக்கு தேர்வு என சுற்றுலா தளங்கள் தொய்வடைந்த நிலையில் இருந்ததுடன், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் ஓரளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. தற்போது ஏற்காட்டில் நிலவும் ‘ஜில்’ கிளைமேட், அதிகாலை பனி மூட்டம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை ஆகிய காரணங்களால் ஏற்காடு இன்று சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பக்கோடா பாயிண்ட், கரடியூர் காட்சி முனை, கிளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களை குதூகலத்துடன் ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுத்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சாலையோர கடைகளில் குறிப்பாக மிளகாய், பஜ்ஜி கடைகளில் விற்பனை களைகட்டியது. இதேபோல, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. மெயின் அருவி, ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி சென்றும் மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா, இடைப்பாடி பூலாம்பட்டியிலும் இன்று ஏராளமானோர் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குளித்து அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags : Christmas ,Yuratt ,Okanakal ,Matur ,Adarad ,Christmas festival ,Adrat ,Mattur ,Salem District Adrat ,
× RELATED சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி...