செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்ப சுவாமி கோயில் மகோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்றாக அச்சன்கோவில் திகழ்கிறது. இங்கு சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சி புரிவதாக ஐதீகம். கேரளாவில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும். இதேபோல் ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா சபரிமலையிலும், அச்சன்கோவிலிலும் மட்டுமே நடந்து வருகிறது. சிறப்புமிக்க அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் இந்தாண்டுக்கான மகோற்சவ திருவிழா, கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து முதல் மூன்று நாட்கள் உற்சவ வாரி திருவிழா, 4ம் நாள் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 5,6 மற்றும் 7ம் நாளில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு நெய் அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை, அன்னதானம், இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு தர்மசாஸ்தா ஆபரணங்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் உலா வந்து கோயில் முன் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை வடம்போல் கட்டி தேர் இழுக்கப்பட்டது. தேருக்கு முன் ஐயப்பனின் தங்கவாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 1 மணிக்கு கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடந்தது.
தேர் நிலையை வந்தடைந்ததும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 9 மணி முதல் கலை நிகழ்ச்சி, சப்பர உலா, பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக, கேரள ஐயப்ப பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இன்று காலையில் ஆராட்டு விழா, நிறைவு திருவிழா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
