- விக்டோரியா பப்ளிக்
- அருங்காட்சியகம்
- சென்னை
- சென்னை மாநகராட்சி
- விக்டோரியா
- பொது மைதானம் அரு
- விக்டோரியா அரங்க
சென்னை: விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியக கண்காட்சியை நாளைமுதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தை பார்வையிட அனுமதி. விக்டோரியா அரங்கத்தை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலை அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை 23ம் தேதி திறந்து வைத்தார். சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியானது, அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டிடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாயில் படகு, பழைய ஸ்கூட்டர், ரிக்ஷா போன்ற நினைவூட்டும் செல்ஃபி பாயிண்ட்கள் மூலம் பழைய சென்னை நகரின் நினைவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியகக் கண்காட்சியை பொதுமக்கள் 26 டிசம்பர் 2025 முதல் பார்வையிடலாம். விக்டோரியா பொது அரங்கத்தினைப் பொதுமக்கள் பார்வையிட சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக (https://chennaicorporation.gov.in/gcc/) VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம். முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். காலை 8.30 மணிக்கு வழிகாட்டியுடன் பார்வை நேரம் தொடங்கி, மாலை 6.30 மணிக்கு நிறைவடைகிறது. ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட பின்னர் நிகழ்ச்சியின் நோக்கம் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும்.
