சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தகவல் என்ற பெயரில் வதந்திகளை பரப்பி எங்களுக்கு எதிராக சதி செய்கின்றனர். எந்த கூட்டணி எங்களுக்கு வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.கூட்டணியில் இணையுமாறு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. தமிழ்நாட்டின் நலனுக்கு ஏற்றாற்போல், அமமுகவுக்கு எது நல்லதோ அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் கூட்டணி முடிவு எடுப்போம். நாங்கள் எந்த கூட்டணில் இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர்தான் கண்டிப்பாக போட்டியிடுவார்.
தே.ஜ.கூட்டணியில் அமமுகவுக்கு 6 தொகுதிகள் என்பது உண்மையானது அல்ல. கூட்டணியே அமையாதபோது எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறுவது அபத்தம். தமிழ்நாட்டில் தவிர்க்கமுடியாத இயக்கமாக அமமுக உள்ளது. விலை போகாத நிர்வாகிகள் எங்களுடன் இருக்கின்றனர். அமமுகவை தவிர்த்து விட்டு யாராலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஜெயலலிதாவுக்கு உறவுகள் இல்லாதபோது குடும்ப நண்பர்களாக நாங்கள் நின்றோம். தன்மானத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அமமுக. எங்கள் கட்சிக்கான கட்டமைப்பு பலமாக இருக்கிறது. கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அழைப்பது உண்மை. தை மாதம் பிறந்த பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். இந்த முறை உறுதியாக அமமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு செல்வோம்,”இவ்வாறு பேசினார்.
