சென்னை: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானம் என கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திருப்பிச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-08 ஆம் ஆண்டு, மத்திய அரசு 3 கோடியே 50 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கியது.இந்த தொகையை கூட்டுறவு ஒன்றியத்தின் வருமானமாக கணக்கில் எடுத்து, வருமானவரித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமானவரித் துறை நிராகரித்தது.
வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாட்டுக்காகவும், மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவதற்காகவும், மத்திய அரசு 3 கோடியே 50 லட்சம் ரூபாயை, மானியமாக வழங்கி உள்ளது. இந்த மானியத்தை, வருவாயாக கருத முடியாது. இது மூலதன வரவு என கூறி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
