ஜெட்டா: இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், பொலாக்னா அணியை வீழ்த்தி, நேபோலி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 1988ம் ஆண்டு முதல் 2 அணிகள் மோதும் போட்டியாக நடந்து வந்தன. கடந்த 2023 முதல் 4 அணிகள் மோதும் போட்டியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான போட்டிகள், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து வந்தன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நேபோலி – பொலாக்னா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் நேபோலி வீரர்கள் பம்பரமாக சுழன்று பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் பலனாக, போட்டியின் 39வது நிமிடத்தில் நேபோலி அணியின் டேவிட் நெரஸ் முதல் கோல் போட்டு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும், அதிரடி காட்டிய அவர் 57வது நிமிடத்தில் 2வது கோல் போட்டு அசத்தினார். மாறாக, பொலாக்னா அணி வீரர்களால் ஒரு கோல் கூட, கடைசி வரை போட முடியவில்லை. எனவே, 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற நேபோலி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
