சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பிஎச்.டி படிக்க ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவ – மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2025-2026ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (பிஎச்.டி) பயிலும் புதிய மற்றும் புதுப்பித்தல் மாணவர்கள் https://adwphdscholarship.in/ என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் திட்ட விதிமுறைகள் (www.tn.gov.in/formdept list.php) முகவரியில் யாவரும் அறியும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2026 நாளன்று மாலை 5.45 மணிக்குள், ‘‘ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
