நன்றி குங்குமம் தோழி
பாண் (Paan) எனக்கூடிய ரொட்டி வகை உணவு இலங்கையில் மிகவும் பிரபலம். திரும்பும் திசைகளில் எங்கும் இந்த பாண் உணவு கிடைக்கும். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த பாரம்பரியமான இந்த உணவு இலங்கை மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இப்போது அங்கு மட்டுமின்றி இந்திய மக்களும் பாண் உணவினை பலவகையான சுவையில் விரும்பி உண்ணுகின்றனர். சென்னை ஆலப்பாக்கம் அருகே இயங்கி வரும் கே.பி.ரவி பேக்கரியில் இலங்கையின் இந்த ஸ்பெஷல் உணவு பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இலங்கையை விட்டு இந்தியா போன்ற வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது ரவி பேக்கரியின் இலங்கை பாண்.
சென்னை போரூர் பகுதியில் வசித்து வருகிறார் பரமநாதன் ரவிச்சந்திரன். இவர் இலங்கை தமிழர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர் டீ கடைகளில் பிரெட் ரோல் தயாரித்து விற்கத் தொடங்கியவர் படிப்படியாக இலங்கை உணவான பாண் ரொட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த உணவு அனைவராலும் ஈர்க்கப்பட்டுள்ளது. இவரின் கடினமான உழைப்பினால் இந்த உணவு தயாரிக்கப்பட்டு வந்தாலும் இவரின் இந்த வளர்ச்சி உணர்வுபூர்வமானது. கடை திறந்த சில மணி நேரங்களிலேயே பாணினை வாங்க மக்கள் வரிசைக்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இரவு வரை பாண் பிரெட்டினை சாப்பிடவே பலர் இங்கு வருகிறார்கள்.
“2010ல் இலங்கையிலிருந்து குடும்பத்துடன் இங்கு வந்து விட்டோம். சென்னை எங்களுக்கு புதுசு என்றாலும் இங்கு வாழ்க்கையை தொடங்க வருமானம் மிகவும் அவசியம். வேறொரு நாட்டிலிருந்து வந்து இங்கு என்ன வேலை செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. மேலும், எங்களுக்குள் ஒரு வித அச்சம், பயம் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து வேலைக்கான வாய்ப்புகளை தேடும் போது இங்கு நிறைய டீ கடைகள் இருப்பதை பார்த்தேன். அங்கு ஸ்நாக்ஸ் போன்ற உணவுகளை விற்பனை செய்வதையும் கண்டேன். எனக்கு சமைக்க தெரியும் என்பதால் டீ கடைக்கு கொடுக்கக்கூடிய பிரெட் ரோலினை தயாரித்து கடைகளில் விநியோகம் செய்யலாம் என்கிற யோசனை வந்தது. என் அம்மாவும் மனைவியும் இதற்கு உதவினார்கள்.
வீட்டில் ரோல்களை தயாரித்துக் கொண்டு வடபழனி வரை நடந்தே ஒவ்வொரு கடையாக செல்வேன். தொடக்கத்தில் யாரும் என்னுடைய ரோலினை வாங்க முன்வரவில்லை. செல்லும் இடமெல்லாம் நிராகரிப்புகளை சந்தித்ததால் மனம் உடைந்து போனேன். இருப்பினும் இதுதான் எங்கள் பிழைப்பிற்கான வழி என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். சுற்றியிருக்கும் எல்லா பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு சென்று பிரெட் ரோலினை விநியோகம் செய்வதை தொடர்ந்தேன். பல சமயங்களில் கைக்கு வருமானம் வந்து சேராது. மேலும், பல வழிகளை தேடிய போது கோயம்பேடு மார்க்கெட் குறித்து கேள்விப்பட்டேன்.
அங்கு என் தொழில் பயணத்தை உறுதியாக தொடங்கினேன். இரவு 2 மணிக்கே ரோல் தயாரிப்பதற்கான வேலைகளை தொடங்கிவிடுவேன். அதிகாலை முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு, அங்கு வேலை செய்பவர்கள், வந்து செல்பவர்களிடம் என நேரடி விற்பனையும் செய்வேன். மழை, வெயில் எதுவென்றாலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உழைத்தேன்.
ஒருமுறை மழை வெள்ளத்தில் கீழே விழுந்து ஆறாயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணாகின. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரம் எனக்கு நிறைய சங்கடங்களை கொடுத்திருந்தாலும், நான் தொடர்ந்து தொழில் செய்ய அந்த இடமே எனக்கு அடித்தளமாக அமைந்தது. காலம் கடந்தும் இப்போதும் மார்க்கெட்டில் நானே நேரடியாக சென்று விற்பனை செய்கிறேன். இப்போது பலரின் ஆதரவும் நட்பும் எனக்கு கிடைத்துள்ளது. வியாபாரத்தை பெருக்க பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய தொடங்கினேன். அதற்காக சில ஆட்களையும் வேலைக்கு சேர்த்தேன். கொரோனா காலத்தின் போது வியாபாரம் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது” என்றவர், மேலும் தொடர்ந்தார்.
“நேரடி விற்பனை மட்டுமின்றி ஒரே இடத்தில் பேக்கரி வைத்து நடத்தலாம் என்கிற சிந்தனையில் இதே பகுதியில் 2020ம் ஆண்டில் பேக்கரி ஒன்றை தொடங்கினேன். இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. செய்யும் தொழிலில் எப்போதும் புதுமைகளை சேர்க்க வேண்டும். இலங்கையின் பிரபலமான உணவான பாண் எனும் ரொட்டி வகையை இங்குள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இந்த பாண் இலங்கை பிரெட். கோதுமை மாவில்தான் தயாரிப்போம்.
அச்சு பாண், ரோஸ்ட் பாண், கொம்பு பன், சங்கிலி பன், கறி பன், மீன் பன் போன்ற உணவுகளை தயாரித்தேன். தொடக்கத்தில் பழக்கமில்லாத உணவு வகை என்பதால் இங்குள்ள மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இலங்கை பாண் இங்கு விற்பனை செய்வது தெரிந்ததும் இப்பகுதியை சுற்றியுள்ள இலங்கை மக்கள் அதிகமாக வரத் தொடங்கினர். இலங்கை பாண் இங்கிருப்பது தெரிந்தால் நிச்சயம் அவர்கள் வருவார்கள் என்பது தெரியும். எனவே, சென்னையில் இலங்கை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு தேடிச் சென்று கடைகளில் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். இலங்கை தமிழர்கள் கடைக்கு வந்து பிரெட்டினை வாங்கியதால், இங்குள்ள மக்களும் அதை வாங்க முன் வந்தார்கள். அவர்களிடம் பாண் பிரெட்டினை எவ்வாறு எந்த உணவுகளுடன் சாப்பிடலாம் என்ற முறைகளை சொல்லித் தந்தேன்.
அவர்களுக்கு அதன் சுவை பிடித்திருந்ததால், தொடர்ந்து வாங்க ஆரம்பித்தார்கள். ரோல், கொம்பு பன், கறி பன் போன்றவை அதிகமாக விற்பனையாகும் உணவு வகைகள். இலங்கையில் பிரபலமான இந்த பாண் உலர்த்தி அரைக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கக்கூடியது. அரைத்த கோதுமை மாவில் டால்டா, தேங்காய் எண்ணெய், ஈஸ்ட் போன்றவற்றை குறிப்பிட்ட பரிணாம அளவுகளில் சேர்த்து 45 நிமிடங்கள் பிசைய வேண்டும். அதற்கென தனிப்பட்ட இயந்திரம் உள்ளது. அதன் பிறகு ஆறு மணி நேரம் கழித்து தட்டுகளில் அடுக்கி, 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சூடேற்றப்பட்ட பெரிய பேக்கிங் ஓவனில் வைத்துவிடுவோம். அடுத்த 30 முதல் 40 நிமிடங்களில் பாண் தயாராகியிருக்கும். இதனை சரியான பதத்தில் உற்பத்தி செய்ய சில நுட்பங்களை கையாளுகிறேன்.
சீனி கொம்பு பாண் அப்படியே சாப்பிடலாம். ரோஸ்ட் பாணினை மீன் குழம்பு, பருப்பு கறி, சம்மந்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் சுவை பிரமாதமாக இருக்கும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புளி, தேங்காய் எல்லாவற்றையும் இடித்து பாணுடன் சேர்த்து சாப்பிடும் போது வேறு சுவையில் இருக்கும். இங்கு வேலை செய்யும் ஜெயராணி ஆரம்ப காலத்தில் கற்றுக்கொள்ள சிரமப்பட்டாலும் இப்போது அற்புதமாக எல்லா வகையான தயாரிப்புகளையும் செய்து வருகிறார். ஓரிடத்தில் பேக்கரி வைத்தாலும் நான் வெளியில் சென்று விற்பனை செய்வதை நிறுத்தவில்லை” என்று உழைப்பை பிரதானப்படுத்தும் பேக்கரி நிறுவனரான ரவிச்சந்திரன், கணித ஆசிரியராக பணியாற்றியவர்.
“இந்தியாவிற்கு வரும் முன் இலங்கையில் நான் கணித ஆசிரியராக பணியாற்றினேன். இலங்கையில் என்னிடம் படித்த மாணவர்கள் ப்ரியமாக இருப்பார்கள். பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன் என்கிற மதிப்பும், மரியாதையும் இருந்தது. நாட்டை விட்டு வந்ததும் மாற்றுத் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கணித ஆசிரியராக பணியாற்றிவிட்டு இந்தத் தொழிலை செய்யும் போது ஆரம்ப காலத்தில் எனக்கு தாள முடியாத மனக்கஷ்டம் ஏற்பட்டது. ஆனால், இப்போது என் பாதை மாறிவிட்டது. பாண் மட்டுமே என் உலகமாக மாறிவிட்டது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று மிகப்பெரிய கனவுடன் தொடர்ந்து உழைத்து வருகிறேன். நான் கற்ற கல்வி மற்றும் அனுபவத்தை இத்தொழிலில் பயன்படுத்துகிறேன்” என்றார் ரவிச்சந்திரன்.
செய்தி:ரம்யா ரங்கநாதன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
