×

களைவு…

நன்றி குங்குமம் தோழி

‘‘களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டுமில்லை… அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்’’ என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.‘‘இதில் ஹரிஷ் உத்தமன், லட்சுமி பிரியா இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். இருபது நிமிடங்கள் மட்டுமே நகரக்கூடிய இந்த குறும் படத்தை பார்க்கும் போது ரொம்ப யதார்த்தமாக இருக்கும்.

களைவு குறும் படத்தை நாங்க இரண்டு பாகமாக எடுத்திருக்கிறோம். மூன்றாம் பாகமும் வெளிவர இருக்கிறது. முதல் பாகம் வெளியிட்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகுதான் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அடுத்து என்ன என்று பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும்படி எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நான் மட்டுமில்லை நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி பிரியா மூவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்’’ என்றவர், மேலும் அந்தப் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு ஒரு கதையை தனித்துவமாக சொல்வதில் திறமையானவர். தற்போது AI திரைப்படத் தயாரிப்பாளராக வலம் வருகிறார். ‘‘நான் அடிப்படையில் ஒரு பிலிம் மேக்கர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர். தற்போது AI பிலிம் மேக்கிங் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறும்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களையும் இயக்கி வருகிறேன்.

என் நண்பர்களுடன் இணைந்து ‘Accessible Horizon Films’ என்ற பெயரில் தனித்துவமான சுயாதீன திரைப்படங்களை தயாரித்து வருகிறோம்.அரேஞ்ச்டு மேரேஜ் பற்றிய ஒரு கற்பனையை மையமாக வைத்துதான் களைவினை நான் திட்டமிட்டேன். அது குறித்து என் குழுவினருடன் நான் விவாதித்த போதுதான் இந்த கதைக்கு நடிகை லட்சுமி பிரியாவும்மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹரிஷ் உத்தமனும் சரியாக இருப்பார்கள் என்று முடிவு செய்தோம். பொதுவாக, என்னுடைய கதைகள் ஆழமாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்’’ என்றார் ரகு.

களைவு முதல் பாகத்தை மிகவும் யதார்த்தமாக படம் பிடித்திருப்போம். இருவரும் இயல்பாக நடித்திருப்பார்கள். இருவருக்கும் இடையிலான உரையாடல்களும் அதற்கு ஏற்பதான் எழுதப்பட்டிருக்கும். தான் சந்திக்க வந்த நபரை விட்டு விட்டு, தவறான நபரிடம் பேசிக் கொண்டுள்ளோம் என்பதை கதாநாயகி உணரும் அந்த நொடியில் அத்தனை அழகாக உணர்வுகளை காட்டியிருப்பார். தவறான நபரிடம் பேசினோம் என்பதை விட சரியான நபரை கண்டுவிட்டோம் என்ற சந்தோஷத்துடன் அவர் திரும்பிப் போவது போல அந்தக் காட்சி அமைந்திருக்கும். அதுதான் களைவு குறும்படத்தின் வெற்றியாகவும் அமைந்தது’’ என்றார் ரகு.

ஹரிஷ் உத்தமன் தனது களைவு அனுபவம் குறித்து கூறிய போது, ‘‘பொதுவாக, எனக்கு வில்லன் கதாபாத்திரங்கள்தான் வரும். ஆனால், நான் தேர்ந்தெடுக்கும் ப்ராஜெக்ட் எப்போதும் வித்தியாசமாக இருக்கும். ‘களைவு’ ப்ராஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இயக்குநர் ரகுவின் இயக்கம் தனித்துவமானது. நடிகை லட்சுமி பிரியா எனது சிறந்த கோ-ஆக்டர். இந்தப் ப்ராஜெக்ட்டை நாங்கள் மிகவும் ரசித்து முடித்தோம்.

களைவு 2 பற்றி நாங்கள் பேச்சுவாக்கில் ஒரு முடிவெடுத்தோம். ஒன்பது வருடங்கள் கழித்துதான் இரண்டாம் பாகம் ஷூட் செய்தோம். எங்களின் வாழ்க்கை மட்டுமில்லாமல் எங்களின் தோற்றமும் முற்றிலும் மாறிவிட்டது இந்த இடைப்பட்ட நாட்களில். இந்த சமயத்தில் இரண்டாம் பாகம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில்தான் துவங்கினோம். ஆனால், அதுவும் நன்றாக அமைந்திருந்தது. இரண்டு பாகங்களும் நன்றாக வந்துள்ளதால், அடுத்த பாகத்தினையும் விரைவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். காரணம், முதல் பாகத்தில் எங்க இருவரின் அறிமுகம் கொடுத்திருப்போம். அடுத்த பாகத்தில் என்னுடைய பின்னணி என்ன என்பதில் ஒரு கேள்விக்குறியாக முடித்திருக்கிறோம். மூன்றாம் பாகம் அடுத்தது என்ன என்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவது போல் அமையும்’’ என்று புன்னகைத்தவரை தொடர்ந்தார் கதையின் நாயகி லட்சுமி பிரியா.

‘‘இந்த ப்ராஜெக்ட் முழுக்க முழுக்க ஆர்வத்தின் அடிப்படையில்தான் அமைந்தது. அந்த நேரத்தில் நான் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வந்தேன். இயக்குநர் ரகுவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் ஹரிஷும் நானும் இந்தப் படத்தில் மிகவும் ரசித்து நடித்தோம். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்தோம். இரண்டு பாகங்களின் இடைப்பட்ட அந்த ஒன்பது வருடத்தில் எனக்கும் திருமணமாகிவிட்டது.

ஹரிஷுக்கும் குடும்பம், குழந்தைகள் என இருவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் நாங்க இருவருமே தோற்ற அமைப்பிலும் மாறி இருப்போம். ஆரம்பத்தில் நிறைய விவாதித்த பிறகு தான் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்தோம். இரண்டு பாகத்தையும் பார்த்த பார்வையாளர்கள் பலர் மூன்றாவது பாகத்தை சீக்கிரம் வெளியிட சொல்லி கேட்டுள்ளனர். அதேபோல் ஹரிஷின் பை ரகசியம் பார்வையாளர்களுக்கு மட்டுமில்லை… எங்களுக்கும் இருக்கிறது’’ என்றார்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

Tags :
× RELATED கோல்!