×

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு

சென்னை : சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்தித்தார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், கூட்டணியில் வேறு கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணியும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் அர்ஜுன் ராம் மேக்வால், நயினார் நாகேந்திரனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் அதிமுக திணறும் நிலையில் பியூஸ் கோயல் தமிழ்நாடு வருகை தந்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என பழனிசாமி அழைப்பு விடுத்த நிலையில் எந்த கட்சியும் வரவில்லை. அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 54 தொகுதிகளை அக்கட்சி ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.

தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 70 தொகுதிகள் வரை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடியுடனான சந்திப்புக்கு பிறகு மீண்டும் பாஜக நிர்வாகிகளை பியூஸ் கோயல் சந்திக்க உள்ளார். மெகா கூட்டணி அமையும் என திரும்ப, திரும்ப பழனிசாமி கூறி வந்தாலும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு 9 மாதங்களாகியும் வேறு எந்த கட்சியும் அதில் இணையவில்லை. இரு கட்சிகளும் இணைந்து எந்த நிகழ்வுகளையும் நடத்தவில்லை.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,BJP ,Piyush Goyal ,Chennai ,MRC Nagar, Chennai ,
× RELATED மீண்டும் மீண்டும் பொய்யை...