*பொதுமக்களுடன் திரண்டு வந்து தாயார் கலெக்டரிடம் மனு
நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரம், நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. நகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் தீபிகா(16). கொட்டாரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது ஆட்டோவில் வந்து இறங்கி உள்ளார்.
ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும், விஜயலட்சுமி குடும்பத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. தீபிகா தனது கணவர் ஆட்டோவில் வந்ததை பார்த்த டிரைவரின் மனைவி மற்றும் உறவினர்கள், தீபிகா வீட்டுக்கு வந்து அவரையும் அவரது தாயாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தீபிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
தீபிகாவை அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (20) என்பவர் காதலித்து வந்துள்ளார். காதலி தற்கொலை செய்ததை அறிந்த பிரதீப்பும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீபிகா, பிரதீப் ஆகியோரின் தற்கொலைக்கு ஆட்டோ டிரைவர் குடும்பத்தினரே காரணம் எனவும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஒரு தரப்பினர் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருவதாகவும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தகவல் பரவிய நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
பின்னர் உறவினர்கள், ஊர் மக்களுடன் திரண்டு வந்த தீபிகாவின் தாயார் விஜயலட்சுமி, குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. மூத்த மகள் தீபிகா.
கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் சேர்ந்து பொது இடத்தில் வைத்து ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியும், அடித்து காயப்படுத்தியும் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இதனால் எனது மகள் தீபிகா மனமுடைந்து கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து சந்தேகம் மரணம் என வழக்குபதிவு செய்திருந்தனர்.
இது சம்பந்தமாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. எனது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட பிரிவு மாறுதல் செய்து வழக்கு பதிவு செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மனுவை கொடுத்திருந்ததன் அடிப்படையில் சட்டப்பிரிவு மாறுதல் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்ய வேண்டும். நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த கலெக்டர் இது தொடர்பாக போலீசாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து எஸ்.பி.யை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மாணவியை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
