சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் செல்லும் நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் இல்லாததால், பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிக்கெட் விலை, அதிக பயண நேரங்கள் ஏற்பட்டு பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100; பெங்களூர் வழியாக சுற்றி போவதால் ரூ.13,400 செலவாகிறது. சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173; பெங்களூர் வழியாக சுற்றிச் செல்வதால் ரூ.17,331 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248; பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,160 செலவாகிறது. சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121; பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால் ரூ.13,842 செலவாகிறது.
சென்னையில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்லும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், கோவைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
