சென்னை: தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவு செய்தவர்களில் 42,637 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்ட குறிப்பிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒன்றிய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கடந்த 2019ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, பரிந்துரைப்பணி அல்லாது மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பணிகளையும் சிறப்புடன் செய்து வருகிறது.
இந்த மையங்களின் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள், தினசரிகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றினை மாணவர்கள் பயன்படுத்தி வருவதுடன், இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும், இணைய வழியாகவும், நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் ஆண்டொண்டிற்கு ரூ.4.22 கோடி செலவிடப்படுகிறது.
இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக கடந்த 2021 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 6,891 மாணவர்கள் பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இத்துறையால் மெய்நிகர் கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in செயல்படுத்தப்பட்டு, இதுவரை இந்த இணையதளத்தில் 5,25,910 தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர். 1,140 மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் மாதந்தோறும் ஒரு வேலைவாய்ப்பு முகாமும், 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
7.5.2021 முதல் 27.10.2025 வரை, 349 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 1,990 சிறிய வேலைவாய்ப்பு முகாம்கள் என மொத்தம் 2,339 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதனால் 4,798 மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் உள்பட 2,78,619 வேலை நாடுநர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கென அரசு ஆண்டுதோறும் ரூ.3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in 16.6.2020 அன்று தொடங்கப்பட்டு, இந்த இணையதளத்தில் 4,76,743 வேலை நாடுநர்களும், 10,935 வேலையளிப்பவர்களும் பதிவு செய்துள்ளனர். 42,637 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பதிவு செய்து உயிர் பதிவேட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் காத்திருக்கும் பொது வேலைநாடுநர்களுக்கும் மற்றும் ஓராண்டிற்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 12,125 பொதுப் பயனாளிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
