5 செவிலிய கல்லூரிகள் தொடங்கப்படும் 723 ஒப்பந்த செவிலியர் விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், ரூ.12 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள், வளாகம் மற்றும் புதிய நுழைவாயில் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: செவிலியர்கள் கோரிக்கைகளில் ஒன்றான நிரந்தரப் பணியாளர்கள் போலவே அனைத்து எம்ஆர்பி (மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்) ஒப்பந்த தொகுதிப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க குறித்து அரசாணை வெளியிடப்படவுள்ளது. திமுக அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில், ஆண்டுதோறும் காலியாகின்ற செவிலியர்களையும் தவிர்த்து 1,200 செவிலியர்கள் முதலமைச்சரால் கடந்த ஆண்டு வரை கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி அந்தப் பணியிடங்களையும் சேர்த்து 3,614 பணியிடங்கள் நிரந்தரம் ஆக்கப்பட்டது. 169 பணியிடங்களுக்கு உடனடியாக பணிநிரந்தர ஆணைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செவிலியர்களின் கோரிக்கையினை ஏற்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-II என்கின்ற பதவி உயர்வு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் இருந்தது, தற்போது அந்தப் பதவி உயர்வும் வழங்கப்பட்டால் 266 பணியிடங்கள் புதிதாக உருவாகும். அதேபோல் செவிலியர் போதகர் நிலை-IIல் 140 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 406 பணியிடங்களில் காலியாக உள்ள 169 பணியிடங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடங்கள் 37 இடங்களில் 148 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் உருவாகிற 723 நிரந்தர பணியிடங்களுக்கு எம்ஆர்பி செவிலியர்களை நியமிக்க விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும். 5 மருத்துவ கல்லூரிகளில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: