செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பில் 500 காதொலி கருவிகள்: கலெக்டர் பிரதாப் வழங்கினார்

திருவள்ளூர், டிச.23:திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 442 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 209 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 26 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 10 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி78 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 119 மனுக்களும் என மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் காதொலி கருவிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 500 காதொலி கருவிகள் ரூ.16,42,500 மதிப்பில் பெறப்பட்டு, அதனை வழங்கும் அடையாளமாக சிறப்புப்பள்ளிகளை சேர்ந்த 32 மாணவர்களுக்கு 64 காதொலி கருவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வெங்கட்ராமன், (நிலம்) நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பாலமுருகன், கலால் உதவி ஆணையர் கணேசன், கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான வெங்கடேசன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: